Sunday, August 17, 2008

என் இனிய வேப்பமரம்..வானி பேருந்து நிலையத்தில் நான் இறங்கும் போது மணி விடியல் காலை 4.45. ஒரு பெரிய கருப்பு போர்வையை போன்று இருள் எங்கும் படர்ந்து இருந்தது. சில்லென்ற காற்று காதுக்குள் ஒரு ஊசியைபோல் இறங்கியது. மெல்ல வீட்டை நோக்கி நடக்க துவங்கினேன். வழியில் ஒரே ஒரு டீ கடை மட்டும் திறந்து இருந்தது. பனியில் நடந்து செல்லும் போது, யாரோ என் தலையில் ஒரு ஐஸ் கட்டியை வைத்து அழுத்துவது போன்ற ஒரு உணர்வு.

சாலையின் இரு பக்கங்களிலும் நியான் விளக்குகள், வெளிச்சத்தோடு சேர்ந்து வெப்பத்தையும் உமிழ்ந்துகொண்டு இருந்தன. இரவுப்பூச்சிகளின் வினோத சத்தம் அங்கு நிலவிய கடும் நிசப்தத்தை கலைத்துக்கொண்டு இருந்தது. இதோ என் வீடு வந்து விட்டது....

ன்று வரலக்ஷ்மி பூஜை என்பதால் வீட்டில் ஸ்பெஷல் ஆக வாசல் தெளித்து சற்றே பெரிய்ய கோலம் போட்டு இருந்தார்கள். வாசலில் ஒரு சாணி பிள்ளையார் வைக்கப்பட்டு அதன் மேல் ஒரு சிறு அருகம் புல்லை குத்தி வெய்த்து இருந்தனர். என்னை வரவேற்பதற்கு பிள்ளையார் வாசலில் காத்து இருக்கிறாரே என்று எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

ரு ரெண்டு மணி நேரமாவது குட்டி தூக்கம் போடலாம் என்று படுத்தால், மின்விசிறி காற்றில் தூக்கமே வரவில்லை. சரியென்று வீட்டின் கொல்லைபுறம் சென்று, வேப்பமரத்தின் அடியில் கட்டிலை விரித்து படுத்தேன். வேப்பமரம் அருகில் இருந்த அந்த சிறிய பிருந்தாவனத்தில் ஒரே ஒரு அகல் விளக்கு மட்டும் எரிந்து கொண்டு இருந்தது. அகல் விளக்கின் நெருப்பு அதை அணைக்க வரும் காற்றிடம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தது.

பாட்டி கொண்டு வந்து கொடுத்த பில்டர் காபியை உறிஞ்சியபடி கேட்டேன்:

"பாட்டி இந்த வேப்பமரத்துக்கு எவ்ளோவ் வயசு ஆறது?"

"ல்லா கேட்டே போ. உனக்கு என்ன வயசு ஆறதோ அதே வயசு தான் இந்த வேப்பமரத்துக்கும் ஆறது....."
"நீ சின்ன குழந்தையாய் இருக்கறப்போ...................."

தன் பிறகு பாட்டி சொன்ன எந்த வார்த்தைகளும் என் காதில் விழவே இல்லை. கட்டிலில் படுத்துக்கொண்டு அந்த வேப்பமரத்தையே பார்த்துக்கொண்டு இருந்தேன். இப்போது நன்றாக விடிந்து விட்டிருந்தது...

ப்படியானால் இந்த வேப்பமரமும் என்னை போலவே எங்கள் வீட்டில் வளர்ந்து வந்துள்ளது. எப்போது வளர்ந்தது என்றே தெரிய வில்லை - இன்று இவ்வளவு பெரிய்ய விருட்ஷம் ஆக வளர்ந்து நிற்கிறது. பச்சை பசேல் என்ற அதல் இலைகளும் நன்கு பரந்து விரிந்த கிளைகளும் பக்கத்து வீட்டின் உள்ளே வரை நீண்டு இருந்தன.

வேப்பமரத்திற்கு மஞ்சள், குங்குமம், பூ எல்லாம் வைக்கப்பட்டு இருந்தது. வேப்பமரம் மாரியம்மனின் வடிவம் என்பது எங்கள் வீட்டில் எல்லோருடைய்ய நம்பிக்கை.

வ்வளவு நாள் நான் ஏன் இந்த வேப்பமரத்தை இப்படி ரசிக்க வில்லை என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். என்னுடன் என் கூடவே 26 ஆண்டு காலம் வரை வளர்ந்துள்ளது. அப்படியானால் என்னுடைய சுகம், துக்கம், கோபம், பசி, குழப்பம், அழுகை, சிரிப்பு என்று எல்லாவற்றையும் இந்த வேப்பமரம் பார்த்து இருக்கும் தானே?

ரு பெரிய பச்சை குடையின் கீழ் நான் படுத்து இருப்பதை போன்று தோன்றியது. இலைகளின் இடுக்குகளின் வழியே வானத்தை பார்த்த போது, வானம் பல்லாயிரக்கணக்கான சிறு சிறு துண்டுகளாக சிதறியிருப்பதாக தோன்றியது.

ந்த மரங்கள் தான் எவ்வளவு விஷயங்களை நமக்கு சொல்லி தருகின்றன? பாவம், நாம் தான் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. மரங்களின் பொறுமையும், அமைதியும், சகிப்புத்தன்மையும், உதவும் மனப்பான்மையும், வலிமையும், தியானமும் மனிதரில் எத்தனை பேருக்கு வரும்? தன்னை வெட்ட வருபவனுக்கு கூட, தான் தரையில் சாயும் கடைசி நிமிடம் வரை நிழலை அல்லவா கொடுக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்...

தோ நான் படுத்திருக்கும் கட்டில், மேசை, நாற்காலி , ஜன்னல், கதவு என எல்லாமே மரங்களின் பாகங்களாக வியாபித்து இருந்தன.

சாலையில் சென்று கொண்டு இருக்கும் போதோ, பேருந்தில் செல்லும் போதோ, கம்பீரமாக வளர்ந்து நிற்கும் மரங்களை எவ்வளவு நாட்கள் நான் கவனித்து இருப்பேன்? பல சமயங்களில் அதை ஒரு ஜடப்பொருளாக நினைத்து கண்டும் காணமலும் சென்று இருக்கிறேன். இன்னும் பல சமயங்களில், என் கண் முன்னே விரிந்து நிற்கும் பெரிய மரங்களை கூட நான் கண்டுகொண்டதே இல்லை. மரம் என்று அப்படி ஒன்றுமே அங்கு இல்லை என்பது போல சென்று இருக்கிறேன். சுட்டெரிக்கும் வெய்யிலில் எனக்கு நிழல் தேவைப்படும் போது மட்டும் மரம் என் கண்களுக்கு தெரியும்.... அப்போது தான் மரங்களை நான் சாலை முழுவதும் தேடுவேன்.... என் மீதே எனக்கு கோபமாக வருகிறது...

னால் எது எப்படி ஆயினும், மரங்கள் மட்டும் எப்போதும் சிரித்துக்கொண்டு தான் இருக்கின்றன.... அதற்கு தெரியும் போலும்...என்றாவது ஒரு நாள் நான் கண்டிப்பாக அதை தேடி செல்வேன் என்று?

வ்வளவு காலம் இந்த வேப்பமரத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு அதனிடம் ஒரு பெரிய "சாரி" கேக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்... அதுமட்டும் இல்லாமல் இனிமேல் எப்போதெல்லாம் சாலையின் ஓரங்களில் மரத்தை காண்கின்றேனோ அப்போதெல்லாம் ஒரு சின்ன சிரிப்பையாவது சிரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்....(என்ன பார்பவர்கள் இவன் ஒரு பைத்தியம் என்று நினைக்க கூடும்... அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டால் முடியுமா?)

திடீர் என்று இந்த மரங்களின் மீது எனக்கு ஒரு புதிய காதல் பிறந்ததைப்போன்று உணர்ந்தேன்....

ன்னையும் அறியாமல் அந்த வேப்பமரத்தின் அருகில் சென்று, அதை மிக வாஞ்சனையோடு வருடிக்கொடுத்தேன்..... ஒரு ஆணின் முதல் ஸ்பரிசத்தில் சிலிர்க்கும் ஒரு பருவப்பெண்ணை போல, அதுவும் தனக்குள் சிலிர்த்துக்கொண்டது.

ந்த சிலிரிப்பினால், காற்றில் வேகமாக அசைந்து, அதன் காய்ந்த சருகுகளை என் மீது தூவியது....

மிகுந்த பாசத்துடன்....!